பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.;

Update:2023-07-10 15:06 IST

 புதுடெல்லி,

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு பேனா வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முறையான அனுமதி பெறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், இந்த நினைவுச்சின்னம் கடலில் அமைக்கப்படுகிறது. இதனால், கடல் வளம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் எந்த கடற்கரை பகுதியிலும் எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, முதலில் இது எந்த மாதிரியான வழக்கு என்ற தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதில் பொதுமக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் உள்ளிட்ட எந்த விபரங்களும் அடங்கவில்லை. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்கமுடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எந்த தடையும் இன்றி பணிகள் நடைபெற உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்