கேரளாவில் சுயேட்சை எம்.எல்.ஏ. அன்வர் ராஜினாமா

இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவை வழங்குவதாகவும் அன்வர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-13 12:13 IST

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பி.வி. அன்வர், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் ஏ.என். ஷம்சீரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அவர் ராஜினாமா செய்ததால் நீலம்பூர் தொகுதி காலியாகிறது. அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவை வழங்குவதாகவும் அன்வர் தெரிவித்துள்ளார்.

2016 மற்றும் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் நீலம்பூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர், பல விஷயங்களில் ஆளும் கூட்டணிக்கு எதிராக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருடனான உறவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துண்டித்தது. அதன்பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள ஜனநாயக இயக்கத்தை (DMK) உருவாக்கினார் அன்வர்.

சமீபத்தில், அவரது தொகுதியில் யானை தாக்கி பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் இறந்ததை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது வனத்துறை அலுவலகத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக அன்வர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்