பெங்களூருவில் பசுக்களின் மடியை துண்டித்த நபர் கைது
பசுக்கள் ரத்த காயங்களுடன் சுற்றித்திரிவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.;
பெங்களூரு,
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அருகே காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பழைய பென்சன் மொகல்லா பகுதியில் வசித்து வருபவர் கர்ணா. இவர், 3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த பசுக்கள் பழைய பென்சன் மொகல்லா ரோடு, அங்குள்ள வினாயகா தியேட்டர் பகுதிகளில் இரை தேடி சுற்றித்திரிவது வழக்கம். அதுபோல், நேற்று முன்தினம் நள்ளிரவும் 3 பசு மாடுகளும் தியேட்டர் பின்புறம் சுற்றித்திரிந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், 3 பசு மாடுகளின் பால்மடியை பிளேடால் அறுத்ததாக தெரிகிறது. இதனால் பசுக்களின் பால்மடியில் இருந்து ரத்தம் வெளியேறியபடி இருந்தது. நேற்று காலையில் பசுக்களின் பால்மடி அறுக்கப்பட்டும், ரத்த காயங்களுடனும் சுற்றித்திரிவதை பார்த்து பசுக்களின் உரிமையாளர் கர்ணா மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இது குறித்து பசுக்களின் உரிமையாளர் கர்ணா கூறுகையில், நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இரவு நேரத்தில் எங்கள் வீட்டின் அருகே மாடுகளை கட்டி வைத்து இருந்தோம், காலையில் இந்த கொடூர செயலை அறிந்து மன வேதனை அடைந்தோம். இதை செய்தது யார் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளோம். எனக்கு நீதி வேண்டும் என்றார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் 3 பசுக்களின் மடியை வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சையத் நஸ்ரு என்பவர் குற்றம் செய்தபோது குடிபோதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பசுவின் உரிமையாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர் ரவிக்குமார் கூறியுள்ளார்.