பெங்களூருவில் பயங்கரவாதி கைது; நாசவேலையில் ஈடுபட திட்டமா? போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூருவில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர், அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டரா? என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-25 16:52 GMT

பெங்களூரு:

பயங்கரவாதி கைது

பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அதேநேரத்தில் பெங்களூருவில் பதுங்கி இருந்து நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடும் பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அடிக்கடி கைது செய்த வண்ணம் உள்ளனர். இதன்காரணமாக பெங்களூருவில் வசித்து வரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட பிற நாடுகளை சேர்ந்தவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெங்களூருவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்

பெங்களூருவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள ஒருவர் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது. அந்த தகவலின்பேரில் பயங்கரவாதி திலக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசிப்பது பற்றிய தகவல்களை போலீசார் உறுதி செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ரமன்குப்தா மேற்பார்வையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 30-க்கும் மேற்பட்ட போலீசார், அந்த குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது 3-வது மாடியில் வாடகைக்கு வசித்து வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், அசாம் மாநிலத்தை சேர்ந்த அக்தர் உசேன் லஸ்கர் என்று தெரிந்தது. அவர், பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக தங்கி இருந்து ஆன்லைன் நிறுவனத்தில் உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு

அதே நேரத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் அவர் நிரந்தர தொடர்பில் இருந்து வந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வாட்ஸ்-அப், டெலிகிராம் ஆகியவற்றின் மூலமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினருடன் அக்தர் உசேன் லஸ்கர் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்தவர்களுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டு, அதன்பிறகு அந்த அமைப்புடன் சேர்ந்து பணியாற்ற அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் இன்னும் 20 நாட்களுக்குள் பெங்களூருவில் இருந்து காஷ்மீர் சென்று, அங்கிருந்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து, நிரந்தரமாக அந்த அமைப்புடன் சேருவதற்கு அக்தர் உசேன் லஸ்கர் திட்டமிட்டு இருந்தது பற்றிய தகவல்களும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசாமில் இருந்து தப்பித்து பெங்களூருவுக்கு பதுங்கி இருந்ததுடன், உணவு விற்பனை பிரதிநிதியாக அவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு விதானசவுதா அருகே உள்ள ஒரு ஓட்டலில் நாச வேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காக அந்த ஓட்டலுக்கு பல முறை சென்று, பார்வையிட்டு வந்ததாகவும், கர்நாடகம் அல்லது தெலுங்கானா மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பயங்கரவாத அமைப்புடன் சேர இருப்பது பற்றி சமூகு வலைதளங்களில் அவர் கருத்துகளை வெளியிட்டு இருந்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதவிர கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே பெங்களூருவுக்கு வந்த அவர், திலக்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7 மாதங்களாக தங்கி இருந்துள்ளார். இந்த 7 மாதங்களிலும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். அக்தர் உசேன் லஸ்கருக்கு ஓட்டலில் வேலை வாங்கி கொடுத்தது யார்?, வேலை செய்ய மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தது யார்?, அவருக்கு பின்னால் வேறு யாரும் உள்ளார்களா? பெங்களூருவில் வேறு எங்கும் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பெங்களூருவில் பரபரப்பு

இந்த நிலையில், பெங்களூருவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் கைது செய்யப்பட்டு இருப்பதை போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியும் உறுதி செய்துள்ளார். கைதான அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பின்பு தான், மற்ற தகவல்கள் தெரியவரும் என்றும், தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்றும் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கைதான அக்தர் உசேன் லஸ்கரை பெங்களூரு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நேற்று மாலையில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பயங்கரவாதி அக்தர் உசேன் லஸ்கர் மீது திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூருவில் பயங்கரவாதி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 நாட்களாக தொடர்ந்து கண்காணிப்பு

பெங்களூருவில் சமீபத்தில் ஸ்ரீராமபுரத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்திருந்தார்கள். இதற்கிடையில், பெங்களூருவில் மற்றொரு பயங்கரவாதி பதுங்கி இருப்பது பற்றிய தகவல் மத்திய உள்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது. இதுபற்றி அவர்கள் உடனடியாக பெங்களூரு போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பயங்கரவாதி அக்தர் உசேன் லஸ்கர் திலக்நகரில் வசிப்பது பற்றிய தகவல்களை போலீசார் உறுதி செய்தாா்கள். கடந்த 15 நாட்களாக அக்தர் உசேன் லஸ்கர் எங்கெல்லாம் செல்கிறார். யாருடன் எல்லாம் தொடர்பில் உள்ளார் பற்றி தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியிருப்பில் சோதனை நடத்தி அக்தர் உசேன் லஸ்கரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்போன், எலெக்ட்ரானிக் டிவைஸ் பறிமுதல்

பெங்களூருவில் பதுங்கி இருந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கரை நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரு போலீசார், தேசிய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து கைது செய்திருந்தார்கள். அக்தர் உசேன் லஸ்கர் தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது பற்றி யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் நடந்து கொண்டார். இதற்காக அசாம் மாநிலத்தினருடனே திலக்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. குறிப்பாக உணவு வினியோகம் என்ற பெயரில் பெங்களூரு நகர் முழுவதும் இரவில் அவர் சுற்றி திரிந்ததும் தெரிந்தது. மேலும் சமூக வலைதளங்களை அவர் அதிகமாக பயன்படுத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைான அக்தர் உசேன் லஸ்கரிடம் இருந்து ஒரு செல்போன், எலெக்ட்ரானிக் டிவைசை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்