ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணைந்த தேஜஸ்வி யாதவ்
பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
பாட்னா,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில், 2-வது கட்டமாக 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
தற்போது பீகார் மாநிலத்தில் அவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களாக அவர் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுடன் பீகார் மாநிலத்தில் அவருடைய நடைபயணம் முடிவடைகிறது. இன்று மாலை உத்தர பிரதேச மாநிலத்திற்கு அவரது நடைபயணம் சென்றடைகிறது.
இந்த நிலையில் இன்று காலை பீகார் மாநிலம் சசாரமில் ராகுல் காந்தியை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் வரவேற்றார். பின்னர் ராகுல் காந்தியை ஜீப்பில் அமர வைத்து தேஜஸ்வி யாதவ் ஜீப்பை ஓட்டினார். ராகுல்காந்தி கைமுரில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்.