2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி உறுதி

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும், இதற்கு தொழில்நுட்ப பயன்பாடு உதவும் என்று பிரதமர் மோடி உறுதிபடக் கூறினார்.;

Update:2023-02-28 23:10 IST

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மாதம் 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான இணையவழி கருத்தரங்குகளில் பிரமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் 'சாத்தியத்தை ஏற்படுத்தி தருதல்: தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வாழ்தல்' என்ற தலைப்பில் நடந்த இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் சிறுதொழில்களின் இணக்கச்செலவினை குறைப்பதற்கு விரும்புகிறோம். அந்த வகையில் வெட்டிவிடக்கூடிய தேவையற்ற இணக்கங்களை உங்களால் (தொழில்துறையினர்) பட்டியலிட முடியுமா? நாங்கள் 40 ஆயிரம் இணக்கங்களை முடித்துள்ளோம்.

நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு

இந்தியா நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைவதை உறுதி செய்து வருகிறது.

5-ஜி தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் தற்போது முன்னணி பேச்சாக மாறி வருகிறது. இவை மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் பல துறைகளை மாற்றுவதற்கு தயாராக இருக்கிறது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஜன்தன் வங்கிக்கணக்கு, ஆதார், செல்போன் எண் ஆகியவை ஏழைகளுக்கு நலத்திட்டங்களின் பலன்கள் போய்ச்சேர உதவி உள்ளன.

தொழில்நுட்பம் போதும்...

தற்போது உங்கள் குறைகளுக்கும், அவற்றுக்கான நிவர்த்திகளுக்கும் ஆள் தேவையில்லை. தொழில்நுட்பம் போதும். செயற்கை நுண்ணறிவால் தீர்த்து வைப்பதற்கு, சாதாரண மக்கள் சந்தித்து வருகிற 10 பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் அடையாளம் காண வேண்டும். 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தினால் இயக்கப்படுவதாகும். அதை ஒருவர் டிஜிட்டல் மற்றும் இணைய தொழில்நுட்பம் என்ற அளவில் கட்டுப்படுத்தி விட முடியாது.

2047-க்குள் வளர்ந்த இந்தியா...

கடந்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பட்ஜெட்டும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் வாழ்க்கையை எளிதாக்குவதை வலியுறுத்தி உள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூட, தொழில்நுட்பத்துக்கும், மனித தொடர்புக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

தற்போது அரசின் குறுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. அரசை குடிமக்கள் தடையாக கருதுவதில்லை.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு தொழில்நுட்ப பயன்பாடு உதவும்.

அரசுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கையின்மை, அடிமை மனப்பான்மையின் விளைவாகும். ஆனால் சிறு குற்றங்களை நீக்குவதன் மூலமும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிப்பவராக ஆவதின் மூலமும் குடிமக்களின் நம்பிக்கையை அரசு மீட்டெடுத்துள்ளது.

பட்ஜெட் அல்லது அரசின் வேறு எந்தக் கொள்கை என்றாலும், அவற்றின் வெற்றி. அவை எவ்வாறு நன்றாகத் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்