தேர்தல் பத்திர திட்டம் சட்டப்பூர்வமானதா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது என்பது தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
புதுடெல்லி,
கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இதில் இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என ஏற்கனவே மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.