கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது சுப்ரீம் கோர்ட்டு கருத்து

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2022-12-05 23:45 GMT

புதுடெல்லி, 

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

பணம், பரிசுப்பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்கக்கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, 'பணம், பரிசுப்பொருட்களை வழங்கி செய்யும் மதமாற்றம் தொடர்பாக மாநில அரசுகளிடம் இருந்து தகவல்களை திரட்டி வருகிறோம். எனவே விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும்' என கோரினார்.

அப்போது நீதிபதிகள், 'பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் மிகவும் ஆபத்தானது, அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது' என்று தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல் பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்