மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரை: குஜராத் - மேகலயா இடையே ராகுல் காந்தி நடைபயணம்?

குஜராத் - மேகலயா இடையே ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

Update: 2023-08-08 15:53 GMT

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கி.மீ.க்கு நடைபயணம் மேற்கொண்டார். இந்தநிலையில் ராகுல் காந்தி மீண்டும் குஜராத் - மேகலயா இடையே நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி குஜராத் - மேகலயா இடையே நடைபயணத்தை தொடங்கும் போது, நாங்களும் மராட்டியத்தில் நடைபயணத்தை தொடங்க உள்ளோம். அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி நடைபயணத்தை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது. ராகுல்காந்தி நடைபயணம் தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்டும்.

மாநில காங்கிரஸ் சார்பில் விதர்பாவில் எனது தலைமையில் நடைபயணம் நடைபெறும். மேற்கு விதர்பாவில் எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தலைமையிலும், மேற்கு மராட்டியத்தில் முன்னாள் முதல்-மந்திரி பிரித்விராஜ் சவான் தலைமையிலும், நிதி தலைநகரான மும்பையில் வர்ஷா கெய்க்வாட் தலைமையிலும் நடைபயணம் நடைபெறும். மராத்வாடாவில் முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் தலைமையிலும், வடக்கு மராட்டியத்தில் பாலாசாகிப் தோரட் பொறுப்பிலும் நடைபயணம் நடைபெறும்.

தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் பகுதியிலும் காங்கிரஸ் சார்பில் நடைபயணம் நடைபெறும். மாநிலத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த பார்வையாளர்கள் தொகுதியில் கட்சியை பலப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வருகிற 16-ந் தேதிக்குள் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்