பிரிவினைவாத சக்திகளுக்கு அவர்களது சொந்த மொழியிலேயே பதிலளித்து, நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு

எத்தனை பிரிவினைவாத சக்திகள் நம்முன் வந்தபோதும், அவர்களது சொந்த மொழியிலேயே பதிலளித்து நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என ராஜ்நாத் சிங் இன்று பேசியுள்ளார்.

Update: 2022-10-27 09:08 GMT



புத்காம்,


நாட்டில் 76-வது காலாட்படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் சார்பில் சவுரியா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவும் கலந்து கொண்டார். இந்தியா ராணுவம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி ஒன்றிலும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இந்த தினத்தில், துணிச்சலான இந்திய காலாட்படை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர்களது தைரியம், தியாகம் மற்றும் சேவைக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து புத்காம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தீர்மானம் ஒன்றை நாம் எடுத்து கொள்ள இந்த தினம் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.

அதன்படி, வருங்காலத்தில் எந்த சூழல் வந்தபோதும், நம் முன்னால் எத்தனை பிரிவினைவாத சக்திகள் வந்தபோதும், அதுபற்றி கவலை கொள்ளாமல் அவர்களது சொந்த மொழியிலேயே பதிலளித்து விட்டு, நம்முடைய நாட்டை நாம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பேசியுள்ளார்.

காஷ்மீருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அடுத்து, இந்த மாதத்தில் சுற்றுப்பயணம் கொண்ட 2-வது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆவார். இன்றைய தினத்தில் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்