ராமர் கோவில் கும்பாபிஷேகம்: இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை- பிரதமர் மோடி
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறி இருப்பதாவது;
அயோத்தியில் குழந்தை ராமரின் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த சுபநிகழ்ச்சியில் நானும் இருப்பது எனது அதிர்ஷ்டம்.
கும்பாபிஷேகத்தின்போது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன்.
என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற உணர்வை அனுபவிப்பது இதுவே முதல்முறை. இந்த நேரத்தில், என் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். மக்களிடமிருந்து ஆசீர்வாதத்தை நாடுகிறேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.