40 வீரர்கள் வீரமரணமடைந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.

Update: 2023-01-28 10:20 GMT

ஸ்ரீநகர்,

2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.

அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அப்பகுதியை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை தற்போது காஷ்மீரை அடைந்துள்ளது. பாத யாத்திரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றிய பின் யாத்திரை நிறைவடைகிறது.

இந்நிலையில், பாதயாத்திரை இன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, 40 வீரர்கள் உயிரிழந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் வீரமரணமடைந்த இடத்தில் ராகுல்காந்தி மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்