3 நாடுகள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

3 நாடுகள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.

Update: 2023-05-25 00:23 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக ஆஸ்திரேலியா நாட்டுக்குச் சென்றார். அங்கு சிட்னி நகரில் நேற்று முன்தினம் 21 ஆயிரம் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த விழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், பிரதமர் மோடியை "நீங்கள்தான் பாஸ்" என கூறி மகிழ்ந்தார். இந்திய, ஆஸ்திரேலிய உறவின் ஆழத்தைப் பற்றி பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார்.

இந்தநிலையில் நேற்று பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கிய தாதுக்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (மரபுசாரா எரிசக்தி) ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பு பற்றி அவர்கள் விவாதித்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்திய, ஆஸ்திரேலிய உறவுகள் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையிலானது. ஆஸ்திரேலியாவில் வாழுகிற இந்தியர்கள் இரு தரப்பு உறவின் வாழும் பாலமாக திகழ்கின்றனர். எனது நண்பர் ஆண்டனி அல்பானீஸ் இந்தியாவுக்கு வந்து 2 மாதங்களுக்குள் நான் ஆஸ்திரேலியா வந்துள்ளேன். கடந்த ஓராண்டில் இது எங்களது 6-வது சந்திப்பு ஆகும். இது நமது விரிவான உறவுகள், நமது ஒரே பார்வை, நமது உறவுகளின் முதிர்ச்சி ஆகியவற்றைக் காட்டுகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்துக்கோவில்கள் தாக்கப்பட்ட விவகாரம் பற்றியும், பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் நான் பிரதமர் அல்பானீசுடன் இதற்கு முன்பும் விவாதித்துள்ளேன். இன்றைக்கும் அந்தப் பிரச்சினையை எழுப்பி விவாதித்தோம்.

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நட்புக்கும், இதமான நல்லுறவுக்கும் தங்கள் செயல்களாலோ, எண்ணங்களாலோ அந்த சக்திகள் பாதிப்பு ஏற்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதில் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைக்காக பிரதமர் ஆண்டனீசுக்கு நான் நன்றி தெரிவித்தேன். எதிர்காலத்திலும் அத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மீண்டும் உறுதி அளித்தார்.

கடந்த ஆண்டு, இந்திய, ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இன்றைக்கு நாங்கள் விரிவான பொருளாதார ஒப்பந்தம் ஒன்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இது நமது பொருளாதார கூட்டை மேலும் வலுப்படுத்தும். ஒத்துழைப்புக்கான புதிய பாதைகளை திறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கும், அந்த நாட்டின் ரசிகர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் ஆஸ்திரேலிய துணைத்தூதரகம் அமைக்கப்படும். இது முக்கியமாக ஆஸ்திரேலிய தொழில்களை, இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைக்க உதவும். நான் பிரதமரான முதல் ஆண்டில், பிரதமர் மோடியை 6 முறை சந்தித்துள்ளேன். இது இரு நாடுகள் இடையேயான ஆழமான உறவின் சிறப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய ஆஸ்திரேலிய சமூகத்தின் பங்களிப்புகளால் ஆஸ்திரேலியா சிறப்பான இடமாக உள்ளது. இரு நாடுகள் இடையே கூடுதலான தொடர்புகளைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாக சிட்னி அட்மிரல்டி இல்லத்தில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய ரீதியிலான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜனுக்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலிய, இந்திய பசுமை ஹைட்ரஜன் செயல்குழுவுக்குரிய குறிப்புகள், விதிமுறைகள் கையெழுத்தானது.

பரமாட்டா நகரைத் தலைமையகமாகக் கொண்டு, ஆஸ்திரேலிய-இந்திய உறவுகளுக்கான புதிய மையம் செயல்படும் என்ற அறிவிப்பை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும், வெளியுறவு மந்திரி பென்னி வாங்கும் அறிவித்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் மூன்று நாடு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். மேலும், நட்பு நாடுகளுடன் வலுவான தொடர்பை வளர்க்கும் வகையில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்கு புறப்பட்டார் என்று அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தற்போது டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்