ஒடிசாவில் பழமையான சிவன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு

ஒடிசாவில் உள்ள பழமையான சிவன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு வழிபாடு செய்தார்.;

Update:2023-02-11 22:46 IST

2 நாள் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் 2-வது நாளான இன்று புவனேஸ்வரில் உள்ள பழமையான சிவன் கோவிலான லிங்கராஜா கோவிலுக்கு சென்றார்.

இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து கோவிலுக்கு புறப்பட்ட அவர், கோவிலுக்கு அருகே சென்றதும் அங்குள்ள பிந்துசாகர் ஏரியில் கால்களை கழுவிக்கொண்டார். பின்னர் வெறுங்காலுடன் கோவில் வளாகத்துக்குள் நடந்து சென்றார். அங்கு கோவில் கருவறைக்கு சென்ற அவர், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடுகளும் மேற்கொண்டார்.

மக்கள் குவிந்தனர்

11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் 40 நிமிடங்களுக்கு மேல் செலவிட்ட ஜனாதிபதி முர்மு, முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள புவனேஸ்வரி, பார்வதி, சித்தி விநாயகர் கோவில்களிலும் தரிசனம் செய்தார். லிங்கராஜா கோவிலுக்கு ஜனாதிபதி வருகை குறித்து அறிந்த ஏராளமான மக்கள் அவரை பார்ப்பதற்காக கோவில் வளாகத்திலும், சாலையின் இருபுறமும் குவிந்தனர். அவர்களை பார்த்து கையசைத்து அவர்களது அன்பை பெற்றுக்கொண்ட முர்மு, சிறுவர்-சிறுமிகளுடன் உரையாடவும் செய்தார். ஜனாதிபதியுடன் அவரது மகள் இதிஸ்ரீ முர்மு, கவர்னர் கணேஷி லால் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கோவில் வளாகம் மற்றும் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அரிசி மாநாடு

லிங்கராஜா கோவிலில் சிறப்பு வழிபாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து கட்டாக்கிற்கு புறப்பட்டார். அங்குள்ள தேசிய அரிசி ஆய்வு நிறுவனத்தில் நடந்த 2-வது இந்திய அரிசி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முர்மு, நாட்டின் உணவுப் பாதுகாப்பின் அடித்தளமாக விளங்கும் அரிசி உற்பத்தியை உயர்த்துவதற்கு, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் போன்ற சவால்களை எதிர்கொள்ளுமாறு வேளாண் விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக கூறியதாவது:-

முன்னணி ஏற்றுமதியாளர்

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் நமது உணவு தேவைகளுக்கு இறக்குமதியை சார்ந்து இருந்தோம். ஆனால் இன்று அரிசியின் உலகின் முன்னணி நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளோம். நெல் பயிருக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் பருவநிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளிகள் இப்போது அடிக்கடி ஏற்படுகின்றன. இது நெல் சாகுபடியை மேலும் பாதிப்படையச் செய்கிறது, பாரம்பரிய அரிசி வகைகள் சவால்களை எதிர்கொள்ளும் இடங்கள் உள்ளன.

மண்ணை காப்பாற்றுதல்

எனவே, ஒருபுறம் பாரம்பரிய அரிசி வகைகளைப் பாதுகாத்தல், மறுபுறம் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் என சமநிலைப் பாதையைக் கண்டறிவதே இன்று நம் முன் உள்ள பணி ஆகும்.நவீன நெல் சாகுபடிக்கு அவசியமானதாகக் கருதப்படும் ரசாயன உரங்களின் அதிகமான பயன்பாட்டிலிருந்து மண்ணைக் காப்பாற்றுவது மற்றொரு சவாலாகும். மண்ணை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு இவ்வாறான உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது இன்றியமையாதது.

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

இத்துடன் ஒடிசா பயணத்தை முடித்துக்கொண்டு அவர் டெல்லி திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்