நேர்மறையானது; இடைக்கால பட்ஜெட்டுக்கு நிதிஷ் குமார் புகழாரம்

உயர் கல்விக்கான கடன் அதிகரிப்பு, 3 ரெயில்வே பொருளாதார வழித்தடங்கள் பற்றிய அறிவிப்பு என பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்ததற்காக அவர் பாராட்டு தெரிவித்து கொண்டார்.;

Update:2024-02-02 06:05 IST

புதுடெல்லி,

விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் வறுமை நிலையுள்ள மக்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதற்கான முக்கிய நோக்கத்துடன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சார்பில் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், நேர்மறையானது என்று புகழ்ந்து இருக்கிறார். இதில், உயர் கல்விக்கான கடன் அதிகரிப்பு, 3 ரெயில்வே பொருளாதார வழித்தடங்கள் பற்றிய அறிவிப்பு என பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்ததற்காக அவர் பாராட்டு தெரிவித்து கொண்டார்.

3 புதிய ரெயில்வே பொருளாதார வழித்தடங்கள் திறப்பால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவாக நடைபெறும் சாத்தியம் உள்ளது. நடுத்தர பிரிவினருக்கு ஒரு சிறப்பான வீட்டு வசதி திட்டம் என்ற அரசின் முடிவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரி வரம்பில் ஓராண்டு தளர்வு என்பது ஆலை முன்னேற்ற பணிக்கு ஊக்கம் தருவதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கான பட்ஜெட் அதிகரிப்பானது, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் பீகாரில், கூட்டணியை முறித்து கொண்டு, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தது நாட்டு மக்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இடைக்கால பட்ஜெட்டுக்கு அவர் புகழாரம் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்