வாக்குறுதிகள் பற்றி பேசாததால் மோடி உரை ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் கண்டனம்
8 ஆண்டுகால வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாததால் பிரதமர் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் உரை முதிர்ச்சியுடன் இருக்கும் என்றும், தனது 8 ஆண்டுகால ஆட்சியின் வாக்குறுதிகள் பற்றி பேசுவார் என்றும் மக்கள் எதிர்பார்த்தனர்.
அதாவது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, அனைவருக்கும் வீடு, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவது உள்ளிட்ட வாக்குறுதிகளுக்கு பதிலை எதிர்பார்த்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாமல், அவர் நாட்டை கைவிட்டு விட்டார். அவரது உரை ஏமாற்றம் அளிக்கிறது.
பிரதமரின் பேச்சில் எந்த உற்சாகமும் இல்லை. அவர் களைத்து போய்விட்டார். அவரது வார்த்தைகளே அவரை துரத்திக்கொண்டுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டு தூக்கம் வராமல் தவிக்கிறார்.
பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றியும் பேசி இருக்கிறார். அவர் பா.ஜனதாவின் உள்விவகாரத்தை பேசி இருப்பதாக கருதுகிறோம். ஏனென்றால், பா.ஜனதா தலைவர்கள் பலருடைய மகன்கள் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் முக்கிய பதவி வகித்து வருகிறார்கள்.
மத்திய உள்துறை மந்திரியின் மகன் கிரிக்கெட் சங்கத்தில் உயர் பதவி வகிக்கிறார். ராஜ்நாத்சிங்கின் மகனும் அரசியலில் இருக்கிறார். எனவே, சொந்த மந்திரிகளையே பிரதமர் தாக்கி இருப்பதாக கருதுகிறோம்.
சுதந்திர போராட்டத்தில் பா.ஜனதா எந்த பங்கும் வகிக்கவில்லை. எனவே, வரலாற்றை திருத்தி அமைக்க முயற்சிக்கிறது என்று அவர் பேசினார்.
பிரதமர் மோடி தனது உரையில் பெண் சக்தி பற்றியும் பேசி இருந்தார். ஆனால், கள நிலவரம் முரணாக இருப்பதாக கண்டனம் எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் அகஞ்சா ஸ்ரீவஸ்தவா, அகில இந்திய முற்போக்கு மாதர் சங்க உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-
பெண்கள் பாதுகாப்பு முக்கியம். ஆனால், 'நிர்பயா' நிதியை பயன்படுத்தி, பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பட்ஜெட்டில், பெண்களுக்கான ஒதுக்கீடு 0.71 சதவீதத்தில் இருந்து 0.66 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தினமும் நடக்கின்றன. பெண்கள் தொடர்பான தனது கட்சியினரின் செயல்பாடுகளை மோடி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.