பெங்களூருவில் அரசு பஸ் மோதி 3 வயது குழந்தை பலி
மடிவாளா அருகே ஸ்கூட்டரில் பாட்டியுடன் சென்றபோது பி.எம்.டி.சி. பஸ் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு உளிமாவு போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ரூஸ்மா. இவரது பேரன் அயன் (வயது 3). இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரூஸ்மா, தனது பேரன் அயனை ஸ்கூட்டரில் வெளியே அழைத்து சென்றார். அப்போது அவர் தனது பேரனை, ஸ்கூட்டரின் பின்பக்க இருக்கையில் அமரவைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மடிவாளா கார்வே பாவி பாளையா சந்திப்பு பகுதி அருகே சென்று கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு (பி.எம்.டி.சி.) சொந்தமான பஸ், ரூஸ்மாவின் ஸ்கூட்டரின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து அயன் சாலையில் தவறிவிழுந்தான். அப்போது அதே பி.எம்.டி.சி. பஸ்சின் சக்கரம் சாலையில் விழுந்து கிடந்த குழந்தை அயன் மீது ஏறி, இறங்கியது.
இதில் அந்த குழந்தை தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ரூஸ்மா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தனது கண்முன்னே பேரன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானதை கண்டு ரூஸ்மா கண்ணீர்விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மடிவாளா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் லேசான காயங்கள் அடைந்த ரூஸ்மாவையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரூஸ்மாவின் சகோதரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரை சந்திப்பதற்காக தனது பேரனை அழைத்து கொண்டு அவர் சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டி.சி. பஸ் அவரது ஸ்கூட்டர் மீது மோதியதும், இதில் கீழே விழுந்த அயன் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதும், இதில் குழந்தை அயன் பலியானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பி.எம்.டி.சி. பஸ்சை பறிமுதல் செய்து, அதன் டிரைவரை கைது செய்தனர். டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து ரூஸ்மா கூறுகையில், எனது பேரன் ஸ்கூட்டரில் இருந்து தவறி சாலையில் விழுந்தான். இதனால் அவன் கதறி அழுதான். அந்த சமயத்தில் விபத்தை ஏற்படுத்திய பி.எம்.டி.சி. பஸ் நிற்காமல் முன்நோக்கி வந்ததால் எனது பேரன் மீது பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டான். டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தி இருந்தால் எனது பேரன் உயிருடன் இருந்து இருப்பான் என்று கண்ணீர் மல்க கூறினார்.
கடந்த வாரம் பெங்களூரு அத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதியதில், பாரத் ரெட்டி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும், அதில் அப்பாவிகள் உயிரிழப்பதும் தொடர் கதையாக நீடித்து வருகிறது. இதை தடுக்க பி.எம்.டி.சி. நிர்வாகமும், வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.