பொது கணக்கு குழு முன்பு செபி தலைவர் மாதபி புச் ஆஜராவாரா..? வெளியான தகவல்
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு, செபி தலைவருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான 'செபி', அதானி குழும முறைகேடு புகார்களை விசாரித்து வருகிறது. அதே சமயத்தில், 'செபி' தலைவர் மாதபி புச், அதானி குழுமங்களில் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதனால், மாதபி புச் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.
இதனிடையே செபி தலைவர் மாதபி புரி விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச்தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் மாதபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி மும்பையிலுள்ள செபி தலைமையகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட செபி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2 மணி நேரத்துக்கும் மேல் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்று தங்களது வழக்கமான பணிகளைத் தொடங்கினர்.
இந்நிலையில், மத்திய அரசின் வரவு, செலவுகளை ஆய்வு செய்யும் பொது கணக்கு குழு, மாதபி புச் ஆஜராக உத்தரவிடக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து பொது கணக்கு குழு தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "உறுப்பினர்களின் யோசனைப்படி, செபி, டிராய் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 'செபி' தலைவர் ஆஜராக உத்தரவிடுவது பற்றி பொது கணக்கு குழுதான் முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.