திருமண விருந்தில் சாப்பிட்டவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் - 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் திருமண விருந்தில் சாப்பிட்டவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாரஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் எடப்பால் அருகே காலடி பகுதியை சார்ந்த இளைஞனுக்கும் துருவாணம் பகுதியில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்
இந்த நிலையில், திருமண விழாவில் இருவீட்டாருக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் உணவருந்தியவர்கள் சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து உணவருந்திய பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த வட்டாரத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் 60 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
திருமண விருந்து வழங்கப்பட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு வகைகளிலிருந்து மாதிரி சேமித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண விருந்தில் பங்கேற்றவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.