மராட்டியத்தில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி விழாவில் சரத்பவார் பங்கேற்பதா? 'இந்தியா' கூட்டணி கட்சி எதிர்ப்பு
இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கும் விழாவில் சரத்பவார் கலந்து கொள்ள இருப்பதற்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சியான உத்தவ் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.;
விருது வழங்கும் விழா
மராட்டிய மாநிலம் புனேயில் லோக்மான்ய திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ந் தேதி நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பெயரில் 'லோக்மான்ய திலக் தேசிய விருது' வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதை பிரதமர் மோடிக்கு வழங்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
'இந்தியா' கூட்டணியில் சலசலப்பு
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் கட்சியை உடைத்து மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் சமீபத்தில் இணைந்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள 'இந்தியா' கூட்டணியில் சரத்பவார் முக்கிய அங்கம் வகிக்கிறார். இந்தநிலையில் சரத்பவார், பிரதமர் மோடி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பது எதிர்க்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இது கூட்டணியில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரத்பவாரின் முடிவுக்கு 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மறுபரிசீலனை
'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை' என்ற முழக்கத்தை பாலகங்காதர திலகர் முன்வைத்தார். ஆனால் தற்போது சுயராஜ்ஜியம் எங்கே இருக்கிறது? தற்போதைய சூழ்நிலை பற்றி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிந்திக்க வேண்டும். தற்போது ஒருவரின் ஆட்சியின் கீழ் 'சவராஜ்ஜியம்' நடந்து வருகிறது. அவர்களது (பா.ஜனதா) கட்சியின் தலைவர்கள் இந்திய அரசியலமைப்பை அழித்து வருகின்றனர். எனவே சரத்பவார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூடாது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறக்கட்டளை தகவல்
இந்தநிலையில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்பதை லோக்மான்ய திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளை துணை தலைவர் ரோகித் திலக் நேற்று உறுதிப்படுத்தினார்.
மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
பிரதமர் மோடி விழாவில் சரத்பவாருடன் அஜித்பவார் மேடையை பகிர்ந்து கொள்ள இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.