எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை - நிதிஷ் குமார்
பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய ஆதரித்து நிதிஷ் குமார் பேசியதாவது;
" அடுத்த முறையும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காது, அவர்கள் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. பீகாரில் நிலுவைவில் உள்ள அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும். நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளீர்கள், ஆனால் நீங்கள் அதை இன்றே செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
மோடியின் ஆட்சியை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.