சமூக வலைத்தளங்களில் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட வாலிபருக்கு ஓராண்டு சிறை
சமூக வலைத்தளங்களில் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட வாலிபருக்கு ஓராண்டு சிறை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
சிவமொக்கா-
சிவமொக்கா(மாவட்டம்) டவுன் பகுதியில் 24 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டில் சிறுமி குளிக்கும்போது செல்போனில் வீடியோ, புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை சிறுமி பார்த்து கூச்சலிட்டார். அப்போது வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து சிறுமியின் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் அந்த வாலிபர் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இதுபற்றி ஜெயநகர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. ஜெயநகர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமி குளிப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராமும் விதித்து தீர்ப்பளித்தார்.