ஒடிசா: ஆளுங்கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.
கட்சியில் புதிதாக இணைந்த தனுர்ஜெய் சித்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமானந்த நாயக் ஏற்கவில்லை.;
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து டெல்கோய் தொகுதி எம்.எல்.ஏ. பிரேமானந்த நாயக் விலகினார். இது தொடர்பாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கிற்கு இ-மெயில் மூலம் கடந்த அக்டோபர் மாதம் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கட்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறியுள்ளார். கடந்த அக்டோபர் மாதமே கடிதம் அனுப்பியபோதிலும், இன்றுதான் முறைப்படி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
டெல்கோய் தனி தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.ல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரேமானந்த நாயக். 2019 முதல் 2022 வரை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தனுர்ஜெய் சித்து கடந்த 2014 சட்டமன்ற தேர்தலின்போது டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வுக்கு சென்றார். 2019 சட்டமன்ற தேர்தலில் பிரேமானந்த நாயக்கை எதிர்த்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறையும் தோல்வியடைந்தார்.
இதையடுத்து பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய தனுர்ஜெய் சித்து, ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமானார். அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமானந்த நாயக் ஏற்கவில்லை. ஆனால் அவரது விருப்பத்திற்கு மாறாக தனுர்ஜெய் சித்துவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த பிரேமானந்த நாயக், கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.