பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு - கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு

பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு தெரிவித்தற்கு கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார்.

Update: 2023-10-26 22:29 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் கோட்டையில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிறகு கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா, பாரதம் ஆகிய 2 பெயர்களும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளவை தான். நாட்டில் பள்ளி பாட புத்தகங்களில் இந்தியா என்பதை நீக்கி விட்டு பாரதம் என சேர்க்க என்.சி.ஆர்.டி. அமைத்த சமூக அறிவியலின் உயர்மட்டக்குழுவின் முடிவை வரவேற்கிறேன். பாட புத்தகங்களில் பாரதம் என்ற பெயர் மாற்றம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல.

பேராசிரியர் சி.ஐ. ஐசக் தலைமையிலான குழு பாரதம் என்ற பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணத்தில் பாரதம் என்ற வார்த்தை உள்ளது. காளிதாசனும் பாரதம் என்ற சொல்லை உச்சரித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். 1757-ம் ஆண்டு பிளாசி போருக்கு பின்னரே இந்தியா என்ற பெயர் சமகால நடைமுறைக்கு வந்தது. 12-ம் வகுப்பு வரை பாட புத்தகங்களில் பாரதம் என்ற பெயரை சேர்க்க இதுவே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் கவர்னரின் கருத்து தொடர்பாக கொல்லத்தில் கல்வித் துறை மந்திரி சிவன் குட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், "பள்ளி பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என சேர்க்கும் முடிவை அங்கீகரிக்க முடியாது. பாடபுத்தகங்களில் காவி பூசி, இதன் மூலம் இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சி நடக்கிறது. பாட புத்தக சீர்திருத்தம் என்ற பெயரில் ஜனநாயகத்திற்கு எதிரான சிந்தனைகள் விதைக்கப்படுகிறது. பாரதம் என்ற மாற்றத்தை கேரளம் புறக்கணிக்கும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்