கர்நாடகம் முதன்மை மாநிலமாக வருவதை யாராலும் தடுக்க முடியாது - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்

பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றால் கர்நாடகம் முதன்மை மாநிலமாக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Update: 2023-03-02 23:00 GMT

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பெலகாவியில் பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நடந்தது. இதனை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கிவைத்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-

முதன்மை மாநிலமாக...

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு முழு மெஜாரிட்டியுடன் வெற்றியை வழங்கினால், இந்த மாநிலம் தென்இந்தியாவில் முதன்மை மாநிலமாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. எடியூரப்பா வயது மூப்பு காரணமாக முதல்-மந்திரி பதவியை கடந்த 2021-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவரது ஒப்புதலுடன் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆக்கப்பட்டார்.

எடியூரப்பா தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தார். அவரது முடிவை அனைவரும் மதிக்க வேண்டும். எடியூரப்பா மீது பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மிகுந்த மரியாதை வைத்துள்ளது. அதனால் தான் அவருக்கு கட்சியின் உயர்நிலை குழுவில் இடம் அளிக்கப்பட்டது. எடியூரப்பாவின் சேவையை மறக்கவே முடியாது. துமகூருவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்துள்ளோம். சிவமொக்காவில் புதிய விமான நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பா.ஜனதா எப்போதும் சொன்னபடி நடந்து கொள்கிறது.

பொருளாதார பலம்

டிஜிட்டல் பண பட்டுவாடாவில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இதனால் பயனாளிகளுக்கு மானியம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் உலக அளவில் இந்தியா மீதான மரியாதை அதிகரித்துள்ளது. இந்தியா பொருளாதார பலமிக்க நாடாக மாறி வருகிறது. தற்போது உள்ள மத்திய அரசு, பயங்கரவாதத்தையும், அதை ஆதரிப்பவர்களையும் சகித்துக்கொள்ளாது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியா தற்போது வெடிகுண்டுகள், பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்கின்றன. நாம் தற்போது இந்தியாவில் தயாரிக்கிறோம், உலகிற்காக தயாரிக்கிறோம் என்ற நிலையில் உள்ளோம்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உள்பட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்