நவீன் பட்நாயக்குடன் நிதிஷ்குமார் சந்திப்பு - இருவரும் பேசியது என்ன..?

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.;

Update:2023-05-10 04:47 IST

புவனேசுவரம்,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

அவர் எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என பல்வேறு தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

இந்த நிலையில் நிதிஷ்குமார் நேற்று ஒடிசா தலைநகர் புவனேசுவரம் சென்றார். அங்கு அவர் முதல்-மந்திரியும், பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மதிய விருந்துடன் கூடியதாக அமைந்தது. இருவரும் என்ன பேசினார்கள் என்ற பரபரப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது.

இரு தலைவர்களும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ஆனால் இருவருமே அரசியல் பேசவில்லை என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நவீன் பட்நாயக் கூறியதாவது:-

நிதிஷ்குமாருக்கும், எனக்கும் நல்ல உறவு உண்டு. நாங்கள் இருவரும் வாஜ்பாய் அரசில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். நிதிஷ்குமாரை இப்போது சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பூரியில் உள்ள நிலம் பற்றி விவாதித்தோம். பீகார் மக்களும், பக்தர்களும் இங்கு வந்து பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபட ஏதுவாக பீகார் பவன் கட்டுவதற்கு 1½ ஏக்கர் நிலத்தை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பா?

இதேபோன்று நிதிஷ்குமார் கூறுகையில், "நவீன் பட்நாயக்குடன் எனக்கு நல்ல உறவு உண்டு. நான் ஒடிசாவுக்கு அடிக்கடி வந்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால்தான் இங்கு வர முடியவில்லை. நாங்கள் அரசியல் பற்றியோ, தேர்தல் கூட்டணி குறித்தோ பேசவில்லை. நவீன் பட்நாயக்குடன் உறவு வலுவாக உள்ளது. அவருடன் அரசியல் பேசும் தேவை இல்லை" என தெரிவித்தார்.

அதே நேரத்தில் நிதிஷ்குமாரிடம், "நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி பேசி முடிவு எடுக்க டெல்லியில் நடக்க உள்ள கூட்டத்துக்கு நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுத்தீர்களா?" என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிப்பதை தவிர்த்து விட்டார்.

நவீன் பட்நாயக்கை பொறுத்தமட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் என இரு கட்சிகளையும் சம தொலைவில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்