கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு; மந்திரிசபை சிறப்பு கூட்டத்தில்

கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீட்டை 18-ல் இருந்து 24 சதவீதமாக அதிகரித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு இன்று நடக்கும் மந்திரிசபை சிறப்பு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.;

Update:2022-10-08 03:17 IST

பெங்களூரு:

கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீட்டை 18-ல் இருந்து 24 சதவீதமாக அதிகரித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு இன்று நடக்கும் மந்திரிசபை சிறப்பு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகத்தில் பழங்குடியினர், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7½ சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரி நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதி பிரசன்னனந்தா சுவாமி கடந்த 200 நாட்களுக்கும் மேலாக பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பழங்குடியின சமூகத்தினக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சட்டத்துறை மந்திரி மாதுசாமி, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், சமூக நலன் மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, சுற்றுலா மந்திரி ஆனந்த்சிங், தலைமை செயலாளர் வந்திதா சர்மா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சட்டசபை ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி உள்பட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இடஒதுக்கீடு அதிகரிப்பு

இந்த கூட்டத்தில் பழங்குடியின (எஸ்.டி.) சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர்களுக்கு (எஸ்.சி.) இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின சமூகத்தினருக்கு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் என மொத்தம் அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை 18-ல் இருந்து 24 சதவீதமாக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆதிதிராவிடர்கள், பழங்குடியின சமூக மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகாிப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபை கூட்டத்தில் அறிவித்தேன். அதன்படி அனைத்துக்கட்சி கூட்டம் எனது தலைமையில் இன்று (அதாவது நேற்று) பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

பெரிய அளவில் போராட்டம்

இதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதி கடந்த 200 நாட்களுக்கும் மேலாக பெங்களூருவில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தினர். அதில், இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கர்நாடக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

அதன் பிறகு எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர், நாகமோகன்தாஸ் குழுவிற்கு மேலும் 6 மாதங்கள் காலஅவகாசம் வழங்கினார். அந்த குழு பல்வேறு அம்சங்களை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை வழங்கியது. அந்த குழு, ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு 3-ல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தலாம் என்று அரசுக்கு பரிந்துரை அளித்தது.

விவரங்களை பெற்றோம்

அந்த குழு அறிக்கை அளித்த பிறகு இட ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2 தீர்ப்புகளை வழங்கியது. அதில் மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கூறப்பட்டது. இதையடுத்து நாங்கள் மேலும் ஒரு குழுவை அமைத்து, நாகமோகன்தாஸ் அறிக்கை பரிந்துரைகளை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து விவரங்களை பெற்றோம்.

சுப்ரீம் கோர்ட்டு, 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், அதற்கு அசாதாரணமான, விசித்திரமான சூழ்நிலை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனால் இரு குழுக்களின் பரிந்துரைகளையும் ஏற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த முடிவுகளை எடுப்பதில் அனைத்துக்கட்சிகளின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினோம். அனைத்துக்கட்சிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

அதன்படி அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு 3-ல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்பு பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அங்கும், இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து நாளை (இன்று) நடைபெறும் மந்திரிசபை சிறப்பு கூட்டத்தில் அதிகாரபூர்வமாக ஒப்புதல் வழங்கப்படும்.

இது மட்டுமின்றி அந்த சமூகங்களுக்குள் இருக்கும் சில உட்பிரிவுகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்று குரல் எழுப்பப்படுகிறது. வரும் நாட்களில் அதுகுறித்தும் விவாதித்து நல்ல முடிவு எடுக்கப்படும். அதே போல் பிற சமூகங்கள் அதாவது பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சிலர் தங்களுக்கு இட ஒதுக்கீட்டு வகையை மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னேறிய சமூகங்கள்

அந்த குழுக்களின் அறிக்கை வந்ததும் அதுபற்றியும் இதே போல் விவாதித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து சமூகங்களுக்கும் உரிய நீதியை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதால் மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

மேலும் மத்திய அரசு முன்னேறிய சமூகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. அந்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதையும் நாங்கள் அமல்படுத்துவோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்