திருமணம் முடிந்த நபர் லிவ்-இன் உறவில் வாழ உரிமையில்லை: அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டால், மற்றொரு பெண்ணுடன் அவர் லிவ்-இன் உறவில் வாழ கூடாது என்று ஐகோர்ட்டு தன்னுடைய உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளது என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.;

Update:2024-05-10 02:58 IST

அலகாபாத்,

உத்தர பிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஏ.ஆர். மசூதி மற்றும் நீதிபதி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா அடங்கிய நீதிபதி அமர்வில், சினேகா தேவி என்ற இந்து பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதில், திருமணம் நடந்து முடிந்த முகமது சதாப் கான் என்ற முஸ்லிம் நபர் மற்றும் சினேகா தேவி இருவரின் லிவ்-இன் முறையை அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு அங்கீகரிக்கவில்லை என கோர்ட்டு தெரிவித்தது. இந்த உறவுமுறைக்கான உரிமையை அங்கீகரிக்க முடியாது என்றும் அது முழுவதும் சட்டவிரோதம் என்றும் நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் நபர், அவருடைய மனைவி உயிருடன் இருக்கும்போது, மற்றொரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருக்க இஸ்லாம் அனுமதிக்காது. இஸ்லாமை பின்பற்றும் ஒரு நபருக்கு இந்த உரிமையில்லை என்றும் கோர்ட்டு தெரிவித்தது.

இதுபற்றி மனுதாரரின் வழக்கறிஞர் தனஞ்சய் குமார் திரிபாதி கூறும்போது, வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் முன்பே திருமணம் செய்திருந்தால், அவர்கள் குடும்ப வாழ்க்கையிலேயே இருக்க வேண்டும். அத்துமீறலில் ஈடுபட கூடாது. சமூக நடைமுறையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டால், மற்றொரு பெண்ணுடன் அவர் லிவ்-இன் உறவில் வாழ கூடாது. அது இந்திய கலாசாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என்று மதிப்புமிகு ஐகோர்ட்டு தன்னுடைய உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்