கர்நாடக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை நவீனமாக்க நடவடிக்கை - பசவராஜ் பொம்மை
பெங்களூருவில் புனித்ராஜ்குமார் பெயரிலான அறிவியல் ஆய்வு மையத்தை திறந்துவைத்த முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, கர்நாடகத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் நவீனமாக்கப்படும் என்று அறிவித்தார்.;
பெங்களூரு மல்லேசுவரம் 18-வது கிராசில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
அறிவியல் ஆய்வு மையம் திறப்பு
அந்த பள்ளியில் பயிற்சி கூடம், கண்காணிப்பு மையம் மற்றும் அறிவியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்திற்கு நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மல்லேசுவரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டதால், அங்கு அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. முன்னதாக அந்த படத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அறிவியல் ஆய்வு மையம், பயிற்சி கூடத்தை திறந்துவைத்தார். பின்னர் அறிவியல் ஆய்வு மையத்தை பார்வையிட்டார்.
முன்னதாக விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நவீன மயமாக்கப்படும்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை தங்களது பிள்ளைகள் போன்று நினைத்து அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் முன்வர வேண்டும். பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அரசு பள்ளி, மாநிலத்தில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. இங்கு மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பதில் இருந்து தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் கட்டிடங்களை கட்டுவதற்கு பதிலாக மாணவர்களுக்கு கல்வி கற்று கொள்ளும் திறனை அதிகரிப்பது, பள்ளியை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது அவசியமாகும். மல்லேசுவரத்தில் உள்ள அரசு பள்ளியை போன்று, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் நவீனமயமாக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
அறிவாற்றல் அதிகரிக்கும்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாநில மொழியை கற்பித்தல், அறிவியல் மற்றும் கணித பாடங்களை கற்று கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆசிரியரும், மாணவர்களுக்கு இருக்கும் அறிவு திறனை வெளிக்கொண்டு வருதல், அறிவாற்றலை உயிரோட்டமாக இருக்கும்படி பார்த்து கொள்ளுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்கள் வரை இதனை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
மல்லேசுவரம் அரசு பள்ளியில் புனித் ராஜ்குமார் பெயரில் அறிவியல் ஆய்வு மையம், பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புனித் ராஜ்குமாரின் புகழையும், பெருமையையும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணுக்கு எடுத்து செல்வார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.