மராட்டியம்: பசுமை துறைமுகம் அமைக்க ரூ.76,220 கோடி ஒதுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்
மராட்டியத்தில் வாதவன் பகுதியில் அமையவுள்ள பெரிய துறைமுகம், நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில் 10 லட்சம் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும்.;
புதுடெல்லி,
மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் தஹானு பகுதியருகே வாதவன் பகுதியில் ஒரு பெரிய துறைமுகம் அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து தட்பவெப்ப சூழ்நிலையிலும், செயல்பட கூடிய, பசுமையான, பெரிய அளவிலான துறைமுகங்களில் ஒன்றாக உருவாக்கப்படும்.
இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழிதடத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இந்த துறைமுகம் இருக்கும். உலக அளவில் டாப் 10 துறைமுகங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்பட மொத்த திட்ட நிதியானது ரூ.76 ஆயிரத்து 220 கோடியாக இருக்கும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், 10 லட்சம் தனிநபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.