மக்களவை தேர்தல்; அசாமில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி கட்சி

தங்களது முடிவை ‘இந்தியா’ கூட்டணி ஏற்கும் என்று நம்புவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.;

Update:2024-02-08 18:56 IST

திஸ்பூர்,

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதன்படி திப்ருகார் தொகுதிக்கு மனோஜ் தனோவர், கவுகாத்திக்கு டாக்டர்.பாபென் சவுத்ரி, சோனித்பூர் தொகுதிக்கு ரிஷி ராஜ் கவுண்டினியா ஆகியோரின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் சந்தீப் பதக் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அசாம் மாநிலத்தில் இருந்து 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இந்த மூன்று தொகுதிகளிலும் முழு பலத்துடன் எங்களது தேர்தல் பணிகளை தொடங்குவோம். 'இந்தியா' கூட்டணி 3 தொகுதிகளையும் ஆம் ஆத்மிக்கு கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

தொகுதி பங்கீடு தொடர்பாக 'இந்தியா' கூட்டணியுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வெற்றி பெறுவதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆம் ஆத்மி கட்சி 'இந்தியா' கூட்டணியுடன் உறுதியாக நிற்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதே எங்கள் முன்னுரிமை.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 3 வேட்பாளர்களின் பெயர்களை 'இந்தியா' கூட்டணி ஏற்கும் என்று நம்புகிறோம். 'இந்தியா' கூட்டணியில் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவது என்ற கூட்டு இலக்கை நோக்கி நாம் முன்னேற வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்