நோயை பரப்புவதற்காக நைஜீரியா சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

கால்நடைகளுக்கு தோல் கட்டி நோயை பரப்புவதற்காக நைஜீரியாவில் இருந்து சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம் சுமத்தி உள்ளார்.

Update: 2022-10-03 15:39 GMT

Image Courtesy: PTI

மும்பை,

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த மாதம் 17-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தன. அந்த சிறுத்தைகளை மத்தியபிரதேச மாநிலம் குணோவில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார்.

நமது நாட்டில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, ஆப்பிரிக்காவில் இருந்து ஐந்து ஆண் சிறுத்தை குட்டிகளும் மூன்று பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசு, நைஜீரியா நாட்டில் இருந்து சிறுத்தைகள் கொண்டு வந்து நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாக மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம் சுமத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், லம்பி எனப்படும் தோல் கட்டி நோய் நைஜீரியா நாட்டில் நீண்ட காலமாக பரவி வருகிறது. அங்கிருந்து இந்த சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாக மத்திய அரசு வேண்டுமேன்றே இதனை செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மாடுகளுக்கு பரவும் லம்பி எனப்படும் தோல் கட்டி நோய் பரவி வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த நோய் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்