பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு; ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவிற்கு ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

Update: 2024-06-13 05:23 GMT

Image Courtesy : @MEAIndia

போர்ட் மோர்ஸ்பி,

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில், எங்கா என்ற பகுதியில் கடந்த மாதம் 24-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட தகவலின்படி, சுமார் 2 ஆயிரம் பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரோடு மண்ணில் புதைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் ஐ.நா. வெளியிட்ட தகவலின்படி சுமார் 670 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாததால் மீட்பு பணியில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனிடையே அந்த பகுதியில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியா மக்களுக்காக இந்திய அரசு சார்பில் ஒரு மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.8.35 கோடி) அளவிலான நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவை அடுத்து, இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம்(F.I.P.I.C.) கூட்டாளியான பப்புவா நியூ கினியாவிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவியை இந்தியா அறிவித்தது.

இந்த அறிவிப்பின்படி, சுமார் 19 டன் அளவிலான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பொருட்களை(H.A.D.R.) ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் இன்று பப்புவா நியூ கினியாவிற்கு புறப்பட்டது. இதில் தற்காலிக குடில்கள், தண்ணீர் தொட்டிகள், சுகாதார கருவிகள், உணவுப் பொருட்கள், அவசர கால மருந்துகள், டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களை கண்டறியும் கருவிகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்