லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் ரூ.600 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின - அமலாக்கத்துறை தகவல்
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய புகார் தொடர்பான வழக்கில் லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.;
பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் (வயது 74).
வேலைக்கு நிலம் லஞ்சம்
ராஷ்டிரீய ஜனதாதள தலைவரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். லாலு பிரசாத்தின் பதவிக்காலத்தில் பீகாரை சேர்ந்த ஏராளமானோர் ரெயில்வேயில் பணியமர்த்தப்பட்டனர். இதற்கு லஞ்சமாக மேற்படி நபர்களிடம் இருந்து லாலு குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள், நிலங்களை இலவசமாக பெற்றதாகவும், குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக லாலு பிரசாத், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் உள்பட 16 பேர் மீது கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
பாட்னாவில் 7 இடங்கள்
பாட்னாவை சேர்ந்த 12 பேரை ரெயில்வேயின் குரூப் டி பிரிவில் பணியமர்த்திய லாலு பிரசாத், இதற்காக பாட்னாவில் இருந்து 7 இடங்களை பெற்றுக்கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிற பகுதிகளில் உள்ள சில நிலங்களை குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் மேற்படி 12 பேரின் குடும்பத்துக்கு சொந்தமானதாகும்.
16 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் உள்பட 16 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இதில் லாலு குடும்பத்தினர் மட்டுமின்றி, ரெயில்வேயில் வேலை பெற்றவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனையும் நடந்தது. தொடர்ந்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கடந்த 6-ந் தேதி ராப்ரி தேவியிடமும், மறுநாள் லாலு பிரசாத் யாதவிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆஜராகவில்லை
இதைப்போல லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வியிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 4-ந் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே நேற்று மீண்டும் அவருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். நேற்று முற்பகலில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விசாரணைக்கு ஆஜராகமாட்டார் எனவும், புதிதாக மற்றொரு தேதி கேட்பார் எனவும் ராஷ்டிரீய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரியங்கா கண்டனம்
தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு பா.ஜனதா அரசு ஏன் அஞ்சுகிறது? எதிர்க்கட்சிகளின் குரல்வளையை அடக்கி ஒடுக்கும் அரசியலில் அரசு ஈடுபட்டுள்ளது. தேஜஸ்வி யாதவ் மீதான விசாரணை நிறுவனங்களின் நடவடிக்கை இந்த அரசியலை சார்ந்தது' என குறிப்பிட்டு இருந்தார்.
ரூ.1 கோடி சிக்கியது
இதற்கிடையே ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தேஜஸ்வி யாதவ், லாலுவின் மகள்கள் ஹேமா, ராகினி, சாண்டா உள்ளிட்டோரின் வீடுகள், ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.எல்.ஏ. அபு டோசனா ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் வீடுகளில் ரூ.1 கோடி சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ரூ.600 கோடி மதிப்பிலான முறைகேடு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ள அதிகாரிகள், இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறினர்.
அரசியல் பழிவாங்கல்
இந்த சம்மன் மற்றும் சோதனை நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீதான இந்த குற்றச்சாட்டை ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி தலைவர்கள் கடுமையாக நிராகரித்து உள்ளனர். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக லாலு குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.