இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தெலுங்கானா அரசு தவறி விட்டது - பிரியங்கா பேச்சு

தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன.

Update: 2023-11-24 23:00 GMT

ஐதராபாத்,

பாரத ராஷ்டிர சமிதி ஆளும் தெலுங்கானாவில், 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.இதையொட்டி, அங்குள்ள பாலகுர்த்தி என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன. அவர்களை பாதுகாக்க பாரத ராஷ்டிர சமிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசு, ஊழலில் ஊறித்திளைக்கிறது. மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஆண்டு வரும் சந்திரசேகர ராவ் அரசு, தனது காலாவதி தேதியை நெருங்கி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு தவறி விட்டது. வேலையின்மையில் முன்னணி இடத்தில் தெலுங்கானா இருக்கிறது. போட்டித்தேர்வு வினாத்தாள் ரகசியமாக கசிகிறது. பிறகு எப்படி இளைஞர்களுக்கு நம்பிக்கை வரும்?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு காலண்டரை உருவாக்குவோம். 2 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிப்போம். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் முதலீட்டு மானியம் அளிக்கப்படும். ரூ.2 லட்சம் வரையிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.2,500, அரசு பஸ்களில் இலவச பயணம், ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் உள்பட 6 உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வேளாண் விளைபொருட்களுக்கு அதிகமான கொள்முதல் விலை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்