'காசி தமிழ் சங்கமம்' ஒரு தனித்துவமான முயற்சி: வாரணாசி வாழ் தமிழர்கள் பெருமிதம்
காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான முயற்சி என்று வாரணாசி வாழ் தமிழர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.;
வாரணாசி,
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி என்னும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற ஒரு மாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள இந்த கொண்டாட்டம், வடக்கே உள்ள காசிக்கும், தெற்கே உள்ள நமது தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றைஇன்றைய தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்க்கிற திட்டம் ஆகும். இதற்கான ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி கழகமும் (ஐ.ஐ.டி) செய்துள்ளன.
முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் கலாசாரத்தை, பண்பாட்டை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காசி தமிழ்சங்கமம் கொண்டாட்டத்தைப்பற்றி வாரணாசியில் வாழ்கிற தமிழர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார்கள். அது வருமாறு:-
நாராயண் தனபதி:- ( இவரது குடும்பம், பல்லாண்டு காலத்துக்கு முன்பாக காசியில் போய் குடியேறியதாகும். இவர் அங்கு மதச்சடங்குகளை நடத்துவதற்கான பயிற்சி அளிப்பவர்)
காசி தமிழ்சங்கமம், ஒரு தனித்துவமான முயற்சி ஆகும். இது காசி மற்றும் தமிழ்நாடு என்னும் இரு வேறு பகுதிகளின் கலாசாரத்தை வெளியே கொண்டுவர உதவும்.
தென் இந்தியாவில் சார்தாம் யாத்திரை(கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி), காசியாத்திரை ஆகியவை தமக்கே உரித்தான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
சந்திரசேகர் திராவிட் :-
எங்களது குடும்பம் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பாக காசியில் வாழத்தொடங்கியதாகும். காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் பல பத்தாண்டு காலமாகவே தொடர்பு உண்டு. தமிழ்நாட்டில் தென்காசி, சிவகாசி என்ற இடங்கள் உளள்ன. இன்றைக்கும் தமிழ் மக்கள் வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்கு வருவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. இந்த கொண்டாட்டம், இரு பகுதிகளின் கலாசாரத்தை உலகுக்கு பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
காசி தமிழ் சங்கமம் என்கிற இந்த ஒரு மாத கால கொண்டாட்டத்தில், கைத்தறி தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள், புத்தகங்கள், ஆவணப்படங்கள், உணவு வகைகள், கலை வடிவங்கள், வரலாறு மற்றும் இரு பிராந்தியங்களின் சுற்றுலாத் தலங்கள் பற்றிய கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.