தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே புதிய ரெயில் சேவை - மத்திய ரெயில்வே மந்திரி

வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே புதிய ரெயில் சேவை தொடங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Update: 2022-12-10 22:04 GMT

கலாசார தொடர்பு

தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி) இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்த பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது.

வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்துறை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரெயில்களில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

ரெயில்வே மந்திரி

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காசி சென்றிருக்கும் தமிழக பிரதிநிதிகள் குழுவினரை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சந்தித்து பேசினார்.

மேலும் வாரணாசி ரெயில் நிலைய மறுசீரைமப்பு திட்டத்தையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்

வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே புதிய ரெயில் சேவை தொடங்கப்படும். இந்த காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். விமான நிலையங்களின் முனையங்களைப்போல ரெயில் நிலையங்களையும் மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பார்வையின் அடிப்படையில் வாரணாசி ரெயில் நிலையம் உலகத்தரத்துடன் மேம்படுத்தப்படும்.

இந்த ரெயில்நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.7 ஆயிரம் கோடி செலவிடப்படும். அடுத்த 50 ஆண்டுகளை மனதில் வைத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

வந்தே பாரத் ரெயில்கள்

வாரணாசி ரெயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பணிகள் செய்யப்படும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களின் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்