அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பா.ஜ.க.வுக்கு நிதிஷ் குமார் கட்சி வலியுறுத்தல்

பீகார் தேர்தலிலும் அக்னிவீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.;

Update:2024-06-06 18:09 IST

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.

மக்களை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின்  உதவி பா.ஜனதாவிற்கு  தேவைப்படுகிறது.

இதனால் மந்திரி சபையில் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி சில விசயங்களை செய்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விரும்புகின்றன.

அமைச்சரவையில் இடம், இரு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து பிரதான கோரிக்கைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பார்வை வேறு பக்கம் உள்ளது. அந்த கட்சி அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது.

கடந்த முறை பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் இந்தியாவின் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் 2022ம் ஆண்டு ராணுவ வீரர்கள் தொடர்பாக அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

4 வருட வேலை என்ற அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். அதன்பின் 15 வருடத்திற்கு நிரந்தர கமிஷன் என்ற அடிப்படையில் 25 சதவீத சம்பளம் வழங்கப்படும். இதனால் பென்சன் வழங்கும் தொகை மிச்சமாகும் என பா.ஜ.க. அரசு எண்ணியது.

இதற்கு பீகார் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளைஞர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ரெயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இந்த திட்டத்தால் வருகின்றன பீகார் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய ஜனதா தளம் நினைக்கிறது. இதனால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது. மேலும் இளைஞர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பை சமாதானம் செய்யும் வகையில், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பா.ஜ.க.வுக்கு நிதிஷ் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் கே.சி. தியாகி கூறுகையில் "அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்த திட்டத்திற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தாக்கம் தேர்தலில் பார்க்க முடிந்தது. நாங்கள் இதை வலியுறுத்தமாட்டோம். அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்