ஐ.எஸ். அமைப்பில் சேர விருப்பம்... ஆன்லைனில் பதிவிட்ட ஐ.ஐ.டி. மாணவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். இந்தியா அமைப்பின் தலைவர் ஹரீஸ் பரூகி மற்றும் அவருடைய கூட்டாளியான ரேஹான் ஆகிய இருவர் 4 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.;

Update:2024-03-24 11:52 IST

கவுகாத்தி,

ஐ.ஐ.டி. கவுகாத்தியில் 4-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர போகிறேன். அதற்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன் என ஆன்லைன் வழியே பதிவிட்டு உள்ளார். இதன்பின்னர், அவரை காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் தேடி வந்தனர். அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் ஹஜோ பகுதியில் அவரை கண்டறிந்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இந்தியா அமைப்பின் தலைவர் ஹரீஸ் பரூகி என்ற ஹரீஷ் அஜ்மல் பரூகி மற்றும் அவருடைய கூட்டாளியான அனுராக் சிங் என்ற ரேஹான் ஆகிய இருவர் 4 நாட்களுக்கு முன் துப்ரி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் வங்காளதேசத்தில் இருந்து எல்லை கடந்து உள்ளே வந்துள்ளனர். இதனை தொடர்ந்தே, அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆன்லைனில் விருப்பம் வெளியிட்டதுடன், இ-மெயில்களையும் அனுப்பியிருக்கிறார். அதனை ஆய்வு செய்தபோதே போலீசாருக்கு விவரம் தெரிய வந்தது.

அவர்கள் ஐ.ஐ.டி. கவுகாத்தி கல்வி நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த மாணவன் மதியத்தில் இருந்து காணவில்லை என்றும் அவனுடைய மொபைல் போன் அணைக்கப்பட்டு விட்டது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதன்பின், தீவிர தேடுதலுக்கு பின்னர், மாணவனை கைது செய்தனர்.

டெல்லியின் ஓக்லா பகுதியை சேர்ந்த அந்த மாணவனின் விடுதி அறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய கருப்பு கொடி ஒன்று இருந்தது. இஸ்லாம் பற்றி அவர் கைப்பட எழுதப்பட்ட குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. இவற்றை நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின்பே ஒரு முடிவுக்கு வரமுடியும். மாணவன் இ-மெயில் அனுப்பியதற்கான நோக்கம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்