இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதம் ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதம் அளவுக்கு இருக்கும் என திருத்தியமைக்கப்பட்ட கணிப்பை உலக வங்கி வெளியிட்டு உள்ளது.;

Update:2022-12-06 14:33 IST



புதுடெல்லி,


உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா இன்று கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை விட தற்போது இந்தியா, கடின சூழலில் இருந்து மீண்டு அதிக உறுதியான நிலையில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், சர்வதேச அளவிலான பாதக நிலை காணப்பட்டபோதும், இந்தியா முன்னேறி செல்வதற்கு உதவி கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுருங்கியிருந்த இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டும் புத்தெழுச்சி பெற்று வலுவாக உள்ளது.

கடந்த அக்டோபரில், நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆனது அதற்கு முந்தின ஜூன் மாத கணிப்பில் இருந்து 1 சதவீதம் குறைத்து 6.5 சதவீதம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு முந்தின அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் வலுவான பொருளாதார நடவடிக்கைகளால் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 6.9 சதவீதம் ஆக உயர்ந்து இருக்கும் என திருத்தியமைக்கப்பட்ட கணிப்பை உலக வங்கி வெளியிட்டு உள்ளது.

இதேபோன்று இந்தியாவின் பணவீக்கம், முந்தின மாதத்துடன் ஒப்பிடும்போது 7.41 சதவீதம் என்ற அளவில் இருந்து அக்டோபரில் 6.77 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது. உணவு பொருட்களின் விலை குறைந்தது இந்த சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்