இந்தியாவா, பாரதமா? 2016-ல் உச்ச நீதிமன்றம் சொன்னது இதுதான்..!
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பொருள்படும்படி பெயர் வைத்தபோதே இதுபோன்ற எதிர்ப்பு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.;
பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A.) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரானது இந்தியா என்ற பொருள்படும்படி இருப்பதால் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் என பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை தவிர்க்கத் தொடங்கியது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பொருள்படும்படி பெயர் வைத்தபோதே இதுபோன்ற எதிர்ப்பு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாட்டின் பெயரையே மாற்றும் அளவுக்கு விவாதம் சென்றிருப்பதுதான் உச்சக்கட்டம்.
இவ்வாறு நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பான விவாதம் இப்போது எழுந்தது அல்ல. 2016ல் இதுதொடர்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிரஞ்சன் பத்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், இந்தியாவை பாரதம் என அழைக்க உத்தரவிடும்படி மனுதாரர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டு மக்கள் தங்கள் விருப்பப்படி நாட்டை இந்தியா அல்லது பாரதம் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று கூறியது. அதேசமயம், பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.
தற்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது பதவியை பாரதத்தின் ஜனாதிபதி என்று குறிப்பிட்டு ஜி20 விருந்து தொடர்பான அழைப்பிதழ் அனுப்பியதால், இந்தியாவா, பாரதமா? என்று நாடு தழுவிய அளவில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் 2016ல் கூறிய கருத்து குறித்தும் பரவலாக பேசப்படுகிறது.