நாடு பாதுகாப்பாக இருக்க 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் - இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே

நாடு பாதுகாப்பாக இருக்க ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-06 02:45 IST

கிரகலட்சுமி திட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அந்த திட்டம் கடந்த மாதம் (ஜூலை) அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தை நேற்று கலபுரகியில் முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாவட்டம் கலபுரகி என்பதால், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த திட்ட தொடக்க விழாவில் பங்கேற்று மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

நாடே மெச்சும்படியாக...

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீட்டில் உள்ள உறுப்பினர்களை கணக்கிட்டு தலா 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தோம். அந்த இலவச திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 5 இலவச திட்டங்களை அமல்படுத்தி, இந்த நாடே மெச்சும்படியாக செய்து காட்டி உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக இமாச்சல பிரதேச முதல்-மந்திரி, என்னை சந்தித்து பேசி இருந்தார். 5 இலவச திட்டங்களை அறிவித்து கர்நாடகத்தில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளீர்கள், அந்த திட்டங்களை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டார்.

நிறைவேற்ற சாத்தியமில்லை

அதுபற்றி என்னிடம் விளக்கமாக கூறும்படியும் சொன்னார். 'மனம் இருந்தால் மார்க்கம்' உண்டு என்று சொன்னேன். ஏழைகள் பற்றி நினைத்து கொண்டு இருந்தால், பணம் கிடைக்கும் வழி தானாக கிடைக்கும். அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கான 5 இலவச திட்டங்களையும் காங்கிரஸ் அரசும், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்களும் நிறைவேற்றி காட்டி உள்ளனர்.

பிரதமர் மோடி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கர்நாடகத்தில் அறிவிக்கப்பட்ட 5 இலவச திட்டங்கள் பற்றி பேசுகிறார். காங்கிரஸ் அறிவித்துள்ள 5 இலவச திட்டங்களையும் நிறைவேற்ற சாத்தியமில்லை என்று பிரதமர் பேசி வருகிறார். நாங்கள் திட்டத்தை செயல்படுத்திய பின்பு, 5 இலவச திட்டங்களால் கர்நாடக அரசு திவாலாகி விடும் என்றும், வளர்ச்சி பணிகளை செய்ய முடியவில்லை என்றும் பிரதமர் பேசுகிறார்.

நாட்டை பாதுகாக்க ஆட்சி

அவரிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக 5 இலவச திட்டங்களை கர்நாடகத்தில் அமல்படுத்தியது எப்படி என்று தகவல் பெற்றுக் கொள்ளட்டும். மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இந்த நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்காக 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். ஒரு நபருக்காக 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லவில்லை.

ஏழைகள், பெண்கள், தலித், கூலி தொழிலாளர்கள், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்கிறேன்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்