உடுப்பி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்க ஆயத்தமாகி வரும் மீனவர்கள்

உடுப்பி மாவட்டத்தில் அரசு அனுமதி வழங்காத நிலையில் கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

Update: 2023-07-14 18:45 GMT

மங்களூரு-

உடுப்பி மாவட்டத்தில் அரசு அனுமதி வழங்காத நிலையில் கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

கடலில் மீன்பிடிக்க...

உடுப்பி மாவட்டத்தில் விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதித்து ஒரு மாதகாலம் ஆகிறது. மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால் ஜூன் மாதம் போதிய மழை பெய்யவில்லை. கடலில் சூறைக்காற்றும் வீசவில்லை. இருப்பினும் விசைப்படகில் மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் மீண்டும் மீன்பிடி தொழிலை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதனால் உடுப்பி மாவட்டத்தில் குந்தாப்புரா, பைந்தூர், கோடி, கங்கொல்லி, கஞ்சுகோடு, ஹொசப்பேட்டை, மரவந்தே, திராட்சி, கோடீரி, உப்பந்தா, மடிகல், அல்வேகத்தே ஆகிய பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மீனவர்கள் ஆயத்தம்

அதுபோல் உப்பண்டாவில் 1,500 விசைப்படகுகளும், கங்கொல்லியில் 300 விசைப்படகுகளும், 35 கலப்பு கூட்டுப்படகுகளும், மரவந்தேவில் 150 விசைப்படகுகளும் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குந்தாப்புரா மற்றும் பைந்தூர் பகுதி மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதுபற்றி மீனவர் சங்கத்தினர் கூறுகையில், 'தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மழை பெய்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் தற்போது மழை பெய்யவில்லை. கடலிலும் சூறைக்காற்று ஏதும் வீசவில்லை. இருப்பினும் மீன்பிடிக்க இன்னும் அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால் எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க ஆயத்தமாகி வருகிறோம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்