3-வது ஆட்சியின் முதல் 100 நாட்களில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் - பிரதமர் மோடி பெருமிதம்

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-09-16 09:44 GMT

காந்திநகர்,

பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை (RE-INVEST 2024) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளுக்கும் தீர்வுகாண முயற்ச்சித்துள்ளோம். 140 கோடி இந்தியர்கள் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர்.

நாட்டின் பன்முகத்தன்மை, அளவு, திறன், செயல்திறன் ஆகியவை தனித்துவமானது. அதனால்தான் உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகளை நான் சொல்கிறேன். அயோத்தி மற்றும் 16 இடங்களை முன்மாதிரி சூரிய நகரங்களாக மேம்படுத்த பணியாற்றி வருகிறோம். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது. முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரவரிசையைத் தக்கவைக்க வேண்டும்.

இப்போதைய 21ம் நூற்றாண்டில் இந்தியா தலைசிறந்த நாடாக திகழும் என்பது இந்தியர்களின் எண்ணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளின் எண்ணமும்தான். நம்மிடம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் வசதியில்லை. ஆகவே, சோலார், காற்றாலை, அணுசக்தி மற்றும் ஹைட்ரோ பவர் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம், நிலையான எரிசக்தி வளம் உருவாக்கப்படும். 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா 2047-ல் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்