காவிரி நீர் பிரச்சினை குறித்து நேரம் வரும்போது பேசுவேன் - முன்னாள் பிரதமர் தேவேகவுடா
காவிரி நீர் பிரச்சினை குறித்து நேரம் வரும்போது பேசுவேன் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.;
இன்னும் வரவில்லை
முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மும்பையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் ஒன்று சேர்ந்தனர். ஆகஸ்டு 30-ந் தேதிக்குள் தொகுதி ஒதுக்கீடு குறித்து இறுதி செய்வதாக கூறினர். அது என்ன ஆனது?. ஒரு குழு அமைத்துள்ளனர். அதன் தலைவர் யார்?. பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறியுள்ளார்களா? அல்லது அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்று அறிவித்துள்ளார்களா?. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ளன.
காவிரி நீர் பிரச்சினை குறித்து நான் எதுவும் பேச மாட்டேன். சித்தராமையா கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் குமாரசாமி எல்லா விஷயங்களையும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து நான் பேச வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது பேசுவேன். பிரதமரை சந்திக்க வேண்டிய தருணம் வந்தால் நானே அவரை சந்திப்பேன்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
தேவேகவுடா பிரார்த்தனை
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா தாலுகாவில் உள்ள சொந்த கிராமமான ஹரதனஹள்ளியில் உள்ள தேவேஸ்வரா கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டார். அதன் பிறகு பைலஹள்ளி கிராமத்திற்கு சென்ற அவர் ஜனார்த்தனசாமி கோவிலுக்கு சென்று பூஜை செய்தார். இந்த பூஜையின்போது, தனது குடும்ப உறுப்பினர்கள் 46 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை தேவேகவுடா அர்ச்சகரிடம் வழங்கினார். அந்த அர்ச்சகர் அந்த பெயர்களை கூறி அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்தனை செய்தார்.