சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன்- ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் பேசினார்.;

Update:2022-07-05 02:59 IST

பழிவாங்கும் நடவடிக்கை

மராட்டிய சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எளிதாக வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இந்த புதிய அரசை அமைப்பதற்கு பின்னால் இருந்த கலைஞர் பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தான். இன்றைய நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தவை இல்லை.

நான் ஒரு சிவசேனாவை சேர்ந்தவன், எப்போதும் அப்படி தான் இருப்பேன். நான் எனது சொந்த முயற்சியின் மூலம் தானே மற்றும் அதை சுற்றியுள்ள 16 லேடீஸ் பார்களை மூடினேன். என் மீது 100-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நான் மிகவும் அமைதியானவன். எங்களை பற்றியோ, கட்சிக்காரர்களை பற்றியோ கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளிக்கிறேன்.

துணை முதல்-மந்திரி பதவி

நாங்கள் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்றபோது, 40 எருதுகள் பலியிடத்திற்கு செல்வதாக கூறினார்கள். இப்போது யார் பலிகடா ஆக்கப்பட்டார்கள்?

2014-ம் ஆண்டு ஆளும் பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது எனக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்க இருந்தது. ஆனால் நான் துணை முதல்-மந்திரி ஆவதை சிவசேனா ஏற்க மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து எனக்கு வழங்கப்பட்ட மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தேன். ஆனால் அப்போது எனக்கு ஆதரவளித்தது, முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் தான். உங்களுக்கு விரைவில் நல்ல பதவி கிடைக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி என்னிடம் கூறினார்.

கடந்த மாநிலங்களவை தேர்தலின்போது நான் ஒதுக்கப்பட்டு இருந்தபோதிலும், சிவசேனா அல்லாத வாக்காளர்களிடம் இருந்து 3 வாக்குகளை எங்கள் வேட்பாளருக்கு என்னால் பெற முடிந்தது.

இதைத்தொடர்ந்து மேல்-சபை தேர்தலின்போது நான் நடத்தப்பட்ட விதம் என்னை கடுமையாக தூண்டிவிட்டது.

200 தொகுதிகள்

சட்டசபையில் தற்போது பா.ஜனதாவின் பலம் 106 ஆகவும், எங்கள் எம்.எல்.ஏ.க்களின் பலம் 50 ஆகவும் உள்ளது. ஆனால் அடுத்த தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இல்லை என்றால் நான் மீண்டும் விவசாய வேலைக்கே சென்றுவிடுவேன். கடந்த காலங்களில் சிவசேனாவை விட்டு வெளியே சென்றவர்கள் இந்துத்வா பாதையில் இருந்து விலகி சென்றனர்.

இருப்பினும் நாங்கள் இந்துத்வா பாதைக்கு திரும்புவதற்காக மகா விகாஸ் அகாடியை விட்டு வெளியேறினோம். அதனால் என்னுடன் இணைந்த ஒரு எம்.எல்.ஏ. கூட தேர்தலில் தோற்க மாட்டார்கள்.

சுனில் பிரபு சாட்சி

நான் எப்படி ஓரங்கட்டப்பட்டேன் என்பதை நேரில் பார்த்தவர்கள் இந்த சபையில் உள்ளனர். நான் நீண்டகாலமாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி இருக்கிறேன். சுனில் பிரவும் (உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ.) எனக்கு நடந்தவற்றிற்கு ஒரு சாட்சி ஆவார்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு கீழ் பணியாற்ற விரும்பவில்லை என்று மகா விகாஸ் அகாடி அரசு அமைவதற்கு முன்பு என்னிடம் கூறப்பட்டது.

ஆனால் மகா விகாஸ் அகாடி அரசு அமைந்த பிறகு உங்கள் சொந்த கட்சியில் (சிவசேனா) விபத்து நடத்துவிட்டது என அஜித்பவார் என்னிடம் கூறினார். நீங்கள் முதல்-மந்திரியாக வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்