வங்காளத்தில் இந்துக்கள், இரண்டாந்தர குடிமக்களாகி விட்டனர்: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பிரசாரத்தின்போது, மேற்கு வங்காளத்தில் ராம நவமியை மக்கள் கொண்டாட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. காங்கிரசும் கூட ராமர் கோவிலுக்கு எதிராக நிற்கிறது என்று பேசியுள்ளார்.

Update: 2024-05-12 11:49 GMT

வடக்கு 24 பர்கானாஸ்,

மேற்கு வங்காளத்தில் 8 மக்களவை தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி பேரக்பூர் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அதில், திரண்டிருக்கும் மக்களின் முகத்தில் தெரியும் ஆர்வம் இந்த தேர்தலில், 2019-ம் ஆண்டில் பெற்ற வெற்றியை விட பா.ஜ.க. கூடுதலான தொகுதிகளை பெறும் என தெரியப்படுத்துகிறது என்று பேசியுள்ளார்.

அப்போது அவர், வங்காளத்தில் வெடிகுண்டு தயாரிப்பை ஒரு குடிசை தொழிலாகவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாற்றி விட்டது. பொதுஜனம் ஒருவர் தன்னுடைய இறை நம்பிக்கையை பின்பற்றுவது என்பது கடினம் ஆகி விட்டது.

ஸ்ரீராமரின் பெயரை மக்கள் உச்சரிக்கும்போது, திரிணாமுல் காங்கிரஸ் அவர்களை அச்சுறுத்துகிறது. ஜெய் ஸ்ரீராம்! ராம நவமியை மக்கள் கொண்டாட அவர்கள் அனுமதிக்கவில்லை. காங்கிரசும் கூட ராமர் கோவிலுக்கு எதிராக நிற்கிறது என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிகளிடம் நாட்டை நாம் விட்டு விட வேண்டுமா? திருப்திப்படுத்தும் கொள்கையில் இந்தியா கூட்டணி முற்றிலும் சரணடைந்து விட்டது. அவர்களுடைய ஆட்சியின் கீழ் வங்காளத்தில் இந்துக்கள், இரண்டாந்தர குடிமக்களாகி விட்டனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இதற்கு முன், முர்ஷிதாபாத் நகரில் நடந்த தேர்தல் பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஹுமாயுன் கபீர் கூறும்போது, பாகீரதி ஆற்றில் இந்துக்கள் 2 மணிநேரத்தில் மூழ்கடிக்கப்படுவார்கள். அப்படி இல்லை என்றால், அரசியலை விட்டு விலகுவேன் என கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

பிரதமர் மோடி, இந்த பேரணிக்கு முன் பேரக்பூர், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வாகன பேரணியையும் நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்