காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல்

காண்டே சட்டசபை தொகுதிக்கு போட்டியிடும் கல்பனா சோரன் எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. படிப்பு படித்துள்ளார்.

Update: 2024-04-29 09:03 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்து வந்த ஹேமந்த் சோரனை நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ந்தேதி கைது செய்தது. இதனால் அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.அதை தொடர்ந்து ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவை முதல்-மந்திரியாக ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் ஹேமந்த் சோரனின் அண்ணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி உயர்த்தியதால் அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் காண்டே சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா போட்டியிடுவார் என ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்தது.

இந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா (வயது 41) வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது ஜார்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் மற்றும் மைத்துனர் பசந்த் சோரன் ஆகியோர் உடனிருந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் மே 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காண்டே தொகுதி எம்.எல்.ஏ.வான, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த சர்பராஸ் அகமது தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.

கல்பனா சோரன் எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பரிபாத நகரில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். புவனேஸ்வர் நகரில் வெவ்வேறு கல்வி மையங்களில் எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளை முடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்