மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு...!
மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது.;
தௌபல்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது. மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறபோதிலும், அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாய் நீள்கிறது.
இந்த நிலையில் , தௌபல் மாவட்டம் லிலோங் சிங்ஜாவ் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 3 கார்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறை காரணமாக மெய்தி இன மக்கள் அதிகமாக வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களான தௌபல், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், விஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.