கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற போலீசார் ரூ.45 லட்சம் பேரம்

கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற போலீசார் ரூ.45 லட்சம் பேரம் பேசி உள்ளதாக அவரது சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

Update: 2022-09-26 06:00 GMT

உப்பள்ளி;


கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி பழைய உப்பள்ளி அருகே உள்ள பிட்னாலா கிராமத்தை சேர்ந்தவர் தீபக். இவர் அங்குள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி மர்மநபர்கள் தீபக்கை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த கொலை வழக்கில் போலீசார் சரியான விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.

இதையடுத்து தீபக் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று இந்த கொலை வழக்கு சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.ஐ.டி. போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.45 லட்சம் பேரம்

இந்த நிலையில், உப்பள்ளி தேஷ்பாண்டே நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தீபக் குடும்பத்தினரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்தனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த தீபக்கின் சகோதரர் சஞ்சய், நிருபர்களிடம் கூறுகையில், தனது சகோதரர் தீபக் கொலை குற்றவாளி யார் என தெரிந்தும் பழைய உப்பள்ளி போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.

அவர்களை இந்த கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற பழைய உப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.கே.பட்டீல், போலீசார் அசோக், நாகராஜ், பரசுராம், வசந்த் ஆகியோர் குற்றவாளிகளிடம் ரூ.45 லட்சம் பேரம் பேசி உள்ளனர்.

மேலும் அவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சாட்சிகளை கலைக்கவும் முயற்சிக்கிறார்கள். குற்றவாளிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு வழக்கை திசை திருப்ப போலீசார் முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீதும், கொலை குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்